திருப்பூரை சேர்ந்த ஜீவா(27), என்பவர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தனது நண்பர்களான குமரானந்தப்புரத்தைச் சேர்ந்த ரவி (33), ரஞ்சித்குமார்( 29) ஆகியோருடன் மைதான பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த குமரானந்தபுரத்தை சேர்ந்த மின் வாரிய தற்காலிக ஊழியரான கண்ணன் (28), அங்கிருந்த கடையில் வைத்திருந்த கரும்பு கட்டில் இருந்து ஒரு கரும்பை எடுத்து சாப்பிட முயன்றார். அப்போது ஜீவாவுக்கும், கண்ணனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், கண்ணன் தான் வைத்திருந்த கத்தியால் ஜீவாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஜீவா தனது நண்பர்களான ரவி, ரஞ்சித் குமாருடன் சேர்ந்து கண்ணனை தாக்கினர். சம்பவம் பற்றி அறிந்ததும் கண்ணனின் நண்பர்களான கந்தசாமி, கார்த்திக் (40), ஆனந்த் (27) ஆகியோர் அங்கு வந்தனர். ஒரு கட்டத்தில் இருதரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்த ரவி உள்பட சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில், காயமடைந்த ரவி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்