திருப்பூரில் லட்சக்கணக்கான பின்னலாடை, பின்னலாடை சார்பு நிறுவனங்களை நம்பி பல லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். குறிப்பாக, 2 லட்சத்திற்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், கரோனா வைரஸ் பெருந்தொற்று அச்சுறுத்தலால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், வட மாநில தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் அரசின் உதவியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
பீகார், ஒரிசா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வேலைக்காக வந்த தொழிலாளர்கள் இதுவரை பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிந்து தங்கள் சம்பளத் தொகையை தங்கள் செலவு போக, மீதியை வடமாநிலங்களிலுள்ள தங்கள் குடும்பத்திற்கு அனுப்பிவந்தனர். அதனால், அவர்கள் கையில் குறைந்த அளவே சேமிப்பு இருந்தது. அந்தத் தொகையும் ஊரடங்கு உத்தரவினால் தீர்ந்துபோனது. இந்நிலையில், சொந்த ஊர்க்கும் செல்ல முடியாமல், புலம்பெயர்ந்த ஊரிலும் வாழ முடியாமல் அவர்கள் தவித்துவருகின்றனர்.
இதுகுறித்து தொழிலாளர் ஒருவர் கூறுகையில், ”திருப்பூர் எங்களுக்கு சொந்த ஊராக அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துவந்தது. தற்போது ஊரடங்கினால், கையில் இருந்த பணம் செலவாகிவிட்டது. மூன்று வேளை உணவு என்பதை இரண்டு வேளைகளாக குறைத்துக்கொண்டு வாழ்கிறோம். இந்த நிலை நீடித்தால் ஒரு வேளைக்கான உணவே கேள்விக்குறியாகும். முன்பு பக்கத்து கடைகளில் கடனுக்கு பொருள் கொடுத்து வந்தார்கள். நிலைமை மோசமாகியதால், அவர்கள்கூட எங்களை நம்பாமல் காய்கறிகளை கொடுக்க மறுக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு எங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். தனித்திருக்க வேண்டும் என கூறி வரும் நேரத்தில், சிறிய அறைகளில் நான்கு முதல் ஆறு பேர் வசித்துவருகிறோம். எங்களுக்கு கரோனா பெருந்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு அறிவித்துள்ள சலுகைகளைப் போல, எங்களுக்கும் உதவ அரசு முன் வர வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: கரோனாவை மறந்து கறி கடையில் குவிந்த பொதுமக்கள்!