தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் 5ஆம் கட்டமாக இன்று 1,464 பேர் ரயில் மூலம் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த வாரம் ஏற்கனவே 4 ரயில் மூலம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி மாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, வட மாநில தொழிலாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. தண்ணீர் பாட்டில் உணவு உள்ளிட்டவைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரயில் மூலம் செல்பவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பும் வகையில் பிகார், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களை பூர்வீகமாக கொண்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 8700 பேரில் 4700 பேர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் தற்போது 1460 தொழிலாளர்கள் பிகார் செல்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவுகளை ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.