இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்றது.
தீர்மானம் நிறைவேற்றம்
அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், "டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு முழு ஆதரவு அளிப்பது, வேளாண் சட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும், கரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உலகிலேயே 2 கொள்கை தான் உள்ளது
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் கட்சிகள் தொடங்குவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. இதில் புதிதாக கட்சி தொடங்கப் போவதாக ஒருவர் அறிவிக்கிறார். மற்றொருவர் தொடங்கிவிட்டார். உலகம் முழுவதும் இரண்டே இரண்டு கொள்கை தான் உள்ளது. ஒன்று இடதுசாரி கொள்கை, மற்றொன்று வலதுசாரி கொள்கை.
மய்யம் கமல்
இந்த இரண்டு கொள்கையை தவிர்த்து மூன்றாவதாக ஒரு கொள்கை இருக்க முடியாது. ஆனால், கமல் அவர்கள் மய்யம் என்று சொல்கிறார். வாகனத்தை ஓட்டும்போது இடதுபுறமாகத் தான் செல்ல வேண்டும் என்பது விதி. தவிர்க்க முடியாத பட்சத்தில் வலதுபுறம் செல்லலாம். இரண்டும் இல்லாமல் நேராகச் சென்றால் எதிரே வருகின்ற லாரியில் மோதி விபத்துக்குள்ளாக வேண்டிய நிலைமை ஏற்படும்" என்றார்.
இதையும் படிங்க: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி