திருப்பூர் வீரபாண்டி பகுதிக்கு உட்பட்ட நொச்சிபாளையம் பிரிவில், ஜனவரி 13ஆம் தேதி அழுகிய நிலையில் ஒரு ஆண் கிடப்பதாக வீரபாண்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்த ஆண் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
மேலும், விசாரணையில் இறந்தவர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திர தாஸ் என்பதும், இவர் திருப்பூர் வீரபாண்டி பிரிவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து ரவீந்திர தாஸ் செல்ஃபோனை காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.
இதில் கடைசியாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த சுபாஷ் (வயது 20) என்ற இளைஞர் பேசியது தெரியவந்தது. வீரபாண்டி பிரிவில் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த சுபாஷிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சுபாஷ் கடந்த ஒரு வருடங்களாக ரவீந்திர தாஸ் உடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகவும் சம்பவ தினத்தன்று திருப்பூர்-பல்லடம் சாலை நொச்சிபாளையம் பிரிவு பகுதியில், இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் என்பதும் அவர்கள் உறவில் இருந்தபோது தகராறு ஏற்பட்டதில் ரவீந்திர தாஸை அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக சுபாஷ் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காவ ல்துறையினர் சுபாஷ் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.