திருப்பூர் மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில் எம்பி சுப்பராயன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், "திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின்தடை காரணமாக ஆக்சிஜன் செலுத்துவதில் இடையூறு ஏற்பட்டு அடுத்தடுத்து நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்தில் மாநில அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டும் அடிப்படை உள்கட்டமைப்பு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழ்நாடு சுகாதாரத் துறையே நோய்வாய்ப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளதுபோல் செயலற்று கிடக்கிறது. தமிழ்நாட்டில் மாநில அரசு நிர்வாகத் திறனற்று, மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை எதிர்த்து போராட முடியாத சூழலில் உள்ளது.
மாநிலத்தில் பாஜக திட்டமிட்டு ரவுடிகளையும், குற்றவாளிகளையும் கட்சியில் சேர்த்து தேர்தல் நேரத்தில் கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்கிறது. பொருளாதாரம் மற்றும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது. தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு எதிரான சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தொழிலாளர்கள், விவசாயிகள் ஒன்றிணைந்து போராடி மத்திய அரசை வீழ்த்த வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: 10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி - தமிழ்நாடு அரசு