ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணக்கம்பாளையம் கிராமத்தில் வேதபாறை என்னுமிடத்தில் அமையவுள்ள நீர்த்தேக்க திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பணிக்கான வேலைகளை தனியாரிடத்தில் வழங்கியுள்ளது. நீர்த்தேக்க திட்டமானது வனப்பகுதி நிலத்திற்குள் அமையவுள்ளதால் மரங்கள் அகற்றப்படவேண்டிய நிலை உருவாகியுள்ளது. மரங்களை அகற்ற வேண்டுமெனில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே செயல்பட வேண்டியுள்ளது.
அதன்படி, இதற்காக உச்ச நீதிமன்றம் ஒரு குழு அமைத்தது. அந்த குழு நீர்த்தேக்க திட்டம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்து, திட்டத்திற்காக அதிக மரங்கள் அகற்றப்பட வேண்டும் என அறிக்கை சமர்ப்பித்தது. இதனையடுத்து, இத்திட்டம் செயல்பட வேண்டுமெனில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அனுமதி பெற்று மரங்களை அகற்றியே திட்டத்தை செயல்ப்படுத்த முடியும்.
இந்நிலையில் திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்புராயன் வேதபாறை நீர்த்தேக்க திட்டம் அமையவுள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்து பொதுப்பணித் துறை அலுவலர்கள், விவசாயிகளுடன் ஆலோசனை செய்தார்.
மேலும் மத்திய அரசின் மூலம் வன விலங்குகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதற்கான சான்று பெறப்பட்டுள்ளதாகவும் இத்திட்டம் விரைந்து செயல்பட தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தினை அணுகி இத்திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் சார்பில் திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்புராயன் கோரிக்கைவைத்துள்ளார்.
இதையும் படிங்க...சாத்தான்குளம் விவகாரம்: முதலமைச்சருக்கு ஸ்டாலின் கேள்வி!