மக்கள் நீதி மய்யம் என்னும் அரசியல் கட்சியைத்தொடங்கியுள்ளநடிகர் கமல், கடந்த ஓராண்டாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து, அதற்கான வேட்பாளர்களையும் இறக்கியுள்ளார். கட்சி பொதுக்கூட்டம், தேர்தல் அறிக்கை, பரப்புரை என பரப்பாக இயங்கி வருகிறார்.
இந்நிலையில், கட்சியில் உள்ள புகைச்சலால் முக்கிய நிர்வாகிகள் விலகி வருகின்றனர். சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கடலூர் தொகுதி வேட்பாளராகஅறிவிக்கப்பட இருந்தசி.கே.குமரவேல் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதற்கு,கோவை சரளாவை வைத்து வேட்பாளர் நேர்காணலை நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று அதிரடியாகக் காரணம் கூறி வெளியேறினார். இவர் அக்கட்சியின் கடலூர் மற்றும் நாகை பொறுப்பாளராக இருந்து வந்தார்.
இதனைத்தொடர்ந்து, திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து வெங்கடேஷ் என்பவரை கட்சித்தலைமை அதிரடியாக நீக்கியுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதனால், கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்தும் உடனடியாக வெங்கடேஷ் நீக்கப்படுகிறார். கட்சியின் மற்ற பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் யாரும் வெங்கடேஷ் என்பவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளகூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியில் இருந்து அடுத்தடுத்து முக்கிய நபர்கள் வெளியேறுவதும், நீக்கமும் மிகவும் பின்னடவைத் தரும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.