திருப்பூர்: மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
காங்கேயம் அருகேயுள்ள சிவன் மலை தண்டாயுதபாணி திருக்கோயில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி திருக்கோவில் , விஸ்வேஸ்வரர் கோயில், வீரராகவ பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட இடங்களில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் க. செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் வினித், மாநகராட்சி இந்து அறநிலையத்துறை ஆணையாளர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி தமிழ்நாடெங்கும் இருக்கின்ற திருக்கோயில்களில் ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெற வேண்டும் என இருக்கின்ற திருக்கோயில்கள், குடமுழுக்குக்காக எடுத்துக் கொண்ட திருக்கோயில்கள் பணி தொய்வடைந்து இருக்கின்ற நிலை, பணிபுரிகின்ற பணியாளர்கள் அர்ச்சகர்களை நேரடியாக சந்தித்து அவருடைய குறைகளை கேட்டு, குடமுழுக்கு பணிகளை விரைவுபடுத்த வகையிலும் ஆய்வு மேற்க்கொண்டு வருகிறோம்.
கோயில்களில் ஆய்வு
மேலும், திருக்கோயில் நிலங்களில் முறையாக வாடகை செலுத்தாமல் இருக்கின்ற நிலையையும், அதேபோல் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களையும் கண்டறிந்து அது குறித்த நடவடிக்கைகளை கள ஆய்வு செய்யவும் நேற்று முன்தினம் (ஜூலை.23) சேலம்,கோயம்புத்தூர், திருப்பூர் என்று பல திருக்கோயில்களுக்கு சென்றோம்.
தமிழ்நாட்டில் குடமுழுக்கு நடைபெற வேண்டிய திருக்கோயில்களை, முதலமைச்சர் கண்டறிய உத்தரவிட்டு, முதற்கட்டமாக ஆளுநர் உரையிலே ரூபாய் 100 கோடி செலவில் அந்தப் பணிகளை செய்திட முடுக்கி விடுவதற்காக மாவட்டம் தோறும் இப்படிப்பட்ட ஆய்வுளை செய்துவருகிறோம்.
அனைத்து கோயில்களிலும் பூஜை
நம்முடைய முதலமைச்சரைப் பொறுத்தளவில் எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு வருமானம் தரக்கூடிய கோயில்கள், வருமானம் இல்லாத சிறு கோவில்கள் என்ற நிலையை மாற்றி அனைத்து திருக்கோயில்களிலும் ஒரு கால பூஜை நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.
அந்த வகையில் இந்த ஆண்டு மிகப்பெரிய அளவிலே குடமுழுக்கு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
பொற்கால ஆட்சி
ஆகவே, ஆன்மீக மக்களுக்கு ஒரு பொற்கால ஆட்சியாகவே இந்த திமுக ஆட்சி இருக்கும். திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல், நம்முடைய துறை செயலாளர் அதிலும் குறிப்பாக ஆணையாளர், மற்ற அனைத்து அலுவலர்களும் முனைப்போடு செயல்பட்டு, இந்த 75 நாட்களில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் அதிக இடங்களை மீட்டு இருக்கின்றோம்" என்றார்.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 2ஆம் தேதி சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படம் திறப்பு!