திருப்பூர்: திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் "தமிழ் மொழி கற்போம்" திட்டத் துவக்க விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, "2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின் அடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 45.500 கோடி எனக் கூறப்படுகிறது. அதிலும் நமது தமிழ்நாட்டில் மட்டும் 34 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். எனக்கு தெரிந்த வரையில் திருப்பூர் மாவட்டத்தில் ஏறக்குறைய 20 லட்சத்திற்கும் மேல் வேறு மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருப்பார்கள்.
அவர்களை வேறு மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று சொல்வதைக் காட்டிலும், நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் அவர்களை நாம் நமது சகோதரர்கள் போலத்தான் பார்க்கிறோம். எனவேதான், வெறும் பேச்சளவில் சகோதரர்கள் எனத் தெரிவிக்காமல் அவர்களை அரவணைத்து நம் தாய் மொழியை அவர்களுக்கு வழங்குவதற்காகத் தொடங்கப்பட்ட உன்னத திட்டம்தான் 'தமிழ் மொழி கற்போம்' திட்டம்.
மேலும், நம்மைத் தேடி நம்மை நாடி வருபவர்களுக்கு அவர்களது தாய் மொழியோடு நம் தாய் மொழியையும் கற்றுக் கொடுப்பதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காகக் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 71.9 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது.
வேறு மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தாய்மொழி எதுவானாலும், அதனோடு தமிழ் மொழியும் கற்றுக் கொடுக்கப்படும். அந்த வகையில் முதல்கட்டமாக ஏறத்தாழ 260 குழந்தைகளுக்கு நமது தாய் மொழி தமிழை, அதற்கென்று சிறப்பு ஆசிரியர்கள் கொண்டு கற்றுக் கொடுக்க தொடங்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "சென்னைக்கு அடுத்தபடியாக கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சி உள்ளது. அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு மண்டலத் தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் என திருப்பூர் மாநகராட்சியில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருப்பதன் மூலம், அதிக அளவில் மக்கள் அரசுப் பள்ளிகளை நம்பி வருவதை உணர முடிகிறது. விரைவில் அனைவரின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்" என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை தலைமைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், மாநகராட்சி மேயர், மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: Viral Video:கையில காசு... பையில சர்டிஃபிகேட் - லஞ்சம் வாங்கும்போது வீடியோவில் லாக் ஆன அரசு ஊழியர்