வணிகர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியில் வணிகர் சங்கப் பேரவையின் சார்பில், மே 5ஆம் தேதி தஞ்சையில் நடைபெறவுள்ள மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு, கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இக்கூட்டத்தில் வணிகர் தினத்தில் கடைகளை அடைப்பது என்பது வணிகர்களின் முடிவாக மட்டுமே இருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் வணிகர்களை கடைகளை அடைக்கச் சொல்லி நிர்பந்திக்கக்கூடாது என்றும், அதை மீறி மிரட்டுபவர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மாநகராட்சி சார்பில் அளவுக்கு மீறி வரி விதிக்கப்படுவதாகவும், அதைப்பற்றி முறையிட்டால் அலுவலர்கள் அலட்சியப்போக்குடன் செயல்படுவதாகவும், இதனை அமைச்சர்கள் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளதாகவும், வணிகர் தின மாநாட்டில் திருப்பூரிலிருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசு இசைப்பள்ளியில் சேர ஓர் அரிய வாய்ப்பு..!