திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முஸ்லிம்கள் மீது காவல்துறையினர் ஒருதலைபட்சமாகக் கைது நடவடிக்கையில் ஈடுபடுவதாகக்கூறி, பல்லடம் கொசவம்பாளையம் சாலையில் 600க்கும் மேற்பட்ட பல்வேறு இஸ்லாமியக் கூட்டமைப்பினர் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து முண்ணனி அமைப்பின் பல்லடம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் என்பவர், ஃபேஸ்புக்கில் இஸ்லாமியர்களைப்பற்றி அவதூறான கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளார். இதுபற்றிக் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் ராஜ்குமாரின் பதிவிற்கு மறுபதிவிட்ட ஹாரிஸ்பாபு என்பவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனைக் கண்டித்து, பல்வேறு இஸ்லாமிய கூட்டமைப்புகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் கொசவம்பாளையம் சாலையில் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்குமுன் எந்தவித முன்னறிவிப்பும், அனுமதியுமின்றி அவர்கள் ஈடுபட்டதால், அனைவரையும் காவல்துறையினர் கைதுசெய்து பல்லடத்திலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் அடைத்தனர்.
இந்நிலையில் எஸ்.டி.பி.ஐயின் மாநில செயற்குழு உறுப்பினர் சையது இப்ராஹிமிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் நிர்வாகிகள் உடனடியாக ஆம்புலன்ஸிற்குத் தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் இப்ராஹிம் மண்டபத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையும் படிங்க:
தையல் மிஷினை மிதித்துக் காட்டு... மாற்றுத் திறனாளியை வஞ்சித்த அலுவலர்!