திருப்பூர் கொங்கு பிரதான சாலைப் பகுதியில் குடிநீர் குழாய் சீரமைப்புக்காக மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தோண்டப்பட்ட குழிகள் பணி முடிந்து வெகு நாள்களாகியும் இன்னும் மூடப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகத்திடம் மதிமுக சார்பில் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதனை நிறைவேற்றாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மதிமுகவினர் கொங்கு பிரதான சாலைப் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 26) திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தையடுத்து காவல் துறையினரால் அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் உறுதி அளித்ததை அடுத்து மதிமுகவினர் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர். இதனால் சில மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.