திருப்பூர் மாநகர காவல் துறை தெற்கு காவல் நிலையத்தில் 2014ஆம் ஆண்டு ஜெகதீஷ் கண்ணன் (28) என்பவர், போக்குவரத்து காவலராக பணியில் இருந்தார். அதே ஆண்டு ஜூன் 26ஆம் தேதி திருப்பூர் பழைய பேருந்து நிலையம் முன்பு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது சாலையின் குறுக்கே வந்த நபரை, அருகே சென்று விலகிச் செல்ல அறிவுறுத்த முயன்றபோது, காவலர் தன்னை பிடிக்க வருவதாக நினைத்த அந்த நபர் ஜெகதீஷ் கண்ணனை கத்தியால் குத்தினார். இதில் பலத்தக் காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெகதீஷ் கண்ணன், சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருப்பூர் தெற்கு காவல் துறையினர், கத்தியால் குத்திய நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தஞ்சாவூரைச் சேர்ந்த கே.கதிரேசன் (38) என்பதும், திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
அவர் மீது கொலை முயற்சி உள்பட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, கதிரேசனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் மூவாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி அனுராதா தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: 100 குழந்தைகளுக்கு உணவளித்து வருகிறேன்: மாணவர்களின் பசியை போக்கும் பள்ளி ஆசிரியை!