தமிழ்நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 30) ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லா ஊரடங்கு என்பதால் மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்ட நிலையில், இதர மளிகை கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வெட்டுப்பட்டான் குட்டை அருகே சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வந்தது. கடையின் பின்புறமும், வெளியிலும் மது பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதுகுறித்து பல்லடம் காவல் துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல் துறையினரை பார்த்ததும் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதனையடுத்து அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்களையும், மது விற்பனை பணம் 6,500 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து பல்லடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.