திருப்பூர் அறிவொளி சாலையில் இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற தொடர் தர்ணா போராட்டத்தில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கலந்துகொண்டார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமுருகன் காந்தி, ”குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், இதற்கு எதிரான தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 9ஆவது நாளாக திருப்பூர் அறிவொளி சாலையில் இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்று வரும் தொடர் தர்ணா போராட்டத்திற்கு மே 17 இயக்கத்தின் முழு ஆதரவை அளிக்கிறோம்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் மக்களின் போராட்டங்களுக்கும் அவர்களின் உணர்வுக்கும் மதிப்பளிக்கும் அரசாக இந்த அரசு இருந்தால் உடனடியாக சட்டப்பேரவையை மீண்டும் கூட்டி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
அரசை எதிர்த்து போராடுபவர்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யும் வழக்கம் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தது, அந்த பிரிட்டிஷ் ஆட்சி கடைசியில் தோல்வியடைந்தது. அதுபோல பாஜக ஆட்சியும் தோல்வியோடு முடிவடையும். இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திப்பது இந்தியா பொருளாதாரத்தை மேலும் வலுவிழக்கச் செய்யும். மேக் இன் இந்தியா என்று பரப்புரை செய்த பிரதமர், தற்போது பாதுகாப்பு சம்பந்தமான அனைத்து விவகாரங்களையும் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்வது பாதுகாப்பானதாக அமையுமா" ? என்றார்.
இதையும் படிங்க : 'தங்க தமிழ்ச்செல்வன், ராஜ கண்ணப்பனை வைத்துக்கொண்டு திமுகவை முட்டுக்கொடுக்கும் ஸ்டாலின்!' - எம்.பி. ரவீந்திரநாத் குமார்