திருப்பூர்: தமிழ்நாட்டில் உள்ள பெரு நகரங்களில் ஒன்றான திருப்பூர் மாவட்டம், பனியன் தொழிலுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. தொழில் துறையில் மிகுந்த வேகமாக வளர்ந்து வரும் இம்மாவட்டம், லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வளித்த மாவட்டம் ஆகும்.
"ஆள் பாதி, ஆடை பாதி" என்ற கூற்றுக்கு இணங்க, மனிதனின் மதிப்பு ஆடையில் மிகுந்து காணப்படுகிறது. அந்த வகையில், ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் என கோலோச்சி வந்தது. அன்னிய செலாவணியை அதிக அளவில் ஈடு தரும் மாவட்டமாகவும் விளங்கியது.
குஜராத், மும்பை, டெல்லி, கொல்கத்தா என உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் திருப்பூரிலிருந்து பனியன் ஆடைகள் வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது. மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் திருப்பூரில் பருத்தி உற்பத்தி அதிக அளவிலிருந்ததால், அதனைக் கொண்டு காட்டன் பனியன் ஆடைகள் தயாரிப்பது வெகு சுலபமாக இருந்தது.
எனவே, அதனை பயன்படுத்திய திருப்பூர் தொழில் முனைவோர், பனியன் தொழிலை வளர்த்து 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் துறையாக மாற்றினர். ஆனால், இன்று நூல் விலை உயர்வு போன்ற காரணங்களால், காட்டன் ஆடைகளின் விலை உயர்ந்துள்ளது. எனவே, குஜராத்தில் இருந்து பாலியஸ்டர் துணிகள் வரவழைத்து ஆடை தயாரிக்க வேண்டிய சூழல் உள்ளது.
மேலும், காட்டன் பனியன் ஆடைகளுக்கான விலையும் அதிகம் என்பதால், அவற்றின் விற்பனையும் சரிந்து வருகிறது. இதனால், காட்டன் ஆடையை தயாரிக்க முடியாமல் இருந்த வட மாநிலங்களும், தற்பொழுது பாலியஸ்டர் பனையன்களைத் தயாரிக்க துவங்கி உள்ளதால் கடும் போட்டி நிலவி வருகிறது.
மேலும் வங்கதேசத்திலிருந்து ஆடைகள் 20 முதல் 30 ரூபாய் குறைவான விலையில் வரிச்சலுகை மூலமாகக் கல்கத்தாவிற்குக் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் திருப்பூரில் வர்த்தகம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், உலகளாவிய பொருளாதார மனநிலை காரணமாக, பொதுமக்களிடையே பணப்புழக்கம் இல்லாததால் வாங்கும் திறன் குறைந்து உள்ளதாகவும், இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளிக்கு விற்பனை 50 சதவீதம் சரிந்துள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மேலும், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கிக் காத்திருந்த வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். மத்திய அரசு வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சொந்த கிராமத்தை உயர்த்த காய்கறி சந்தை.. வெளிநாட்டு தொழிலதிபரின் மகத்தான செயல்!