திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார். அப்போது அவர் கெயில் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து கோரிக்கை மனுவை பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் கனிமொழி பேசியதாவது, "இப்பகுதி விவசாயிகளால்தான் ஊத்துக்குளி வெண்ணை பிரபலம். உயர் மின் கோபுரங்கள் அமைப்பதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. பாரத் பெட்ரோலியம் பைப் லைனை விவசாய நிலங்கள் வழியாக அமைக்கிறது. உயர் மின் கோபுரம் அமைப்பதை தவிர்த்து நிலத்தடியில் கேபிள் வழியாக கொண்டு செல்ல வேண்டும். இதற்கு முன் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுரங்கள் உள்ள நில உரிமையாளர்களுக்கு உரிய வாடகை வழங்க வேண்டும்.
விவசாயிகள் தங்களது நிலம் பறிக்கப்படும் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் குளிரிலும் வட மாநில விவசாயிகள் போராடி வருகின்றனர். அரசு அவர்களது கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இருப்பினும் தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்த வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விவசாயத்தை அடகு வைக்கும் சட்டமாக உள்ளது. இந்த சட்டங்களை ஆதரிப்பவர்தான் தன்னை விவசாயி என சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்த உலகத்தை கரோனாவிடம் இருந்து அறிவியல் காப்பாற்றவில்லை. விவசாயிகள்தான் காப்பாற்றினார்கள்" என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கனிமொழி தெரிவித்ததாவது, "டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் இல்லை என பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்திருப்பது விவசாயிகளை கொச்சைப்படுத்தும் செயல். கடும் குளிரிலும் போராடும் விவசாயிகளை இவ்வாறு கொச்சைப்படுத்துவது மனிதாபிமானமற்றது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டம் குறித்து அவதூறு பரப்பிய நடிகை கங்கனா மன்னிப்புக் கேட்க வேண்டும்!