கரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் தமிழ்நாட்டில் வருகின்ற 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று தனியார் சுற்றுலா வாகனங்களும் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் நிறுவனத்தினர் தவணை தொகையை வசூலிக்க கூடாது என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இருந்தபோதிலும், சுற்றுலா வாகனங்களுக்கு கடன் வாங்கிய தொகைக்கான இஎம்ஐ தவணைத் தொகையை வட்டியுடன் செலுத்துமாறு சில தனியார் நிதி நிறுவனங்கள் கூறிவருகின்றன.
இந்நிலையில் தவணைத் தொகை வட்டியை ரத்து செய்ய வேண்டும், வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ள டீசல் விலை உயர்வு, சுற்றுலா வாகன ஓட்டுனர்களுக்கு பேரிடர் கால நலத்திட்ட உதவிகள் வழங்க வலியுறுத்தல், ஓட்டுனருக்கு என்று தனி வாரியம் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட அனைத்திந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பில் வாகனங்களில் கருப்புக் கொடி கட்டி இன்று (ஜூலை22) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க...ஐஐடி நுழைவுத் தேர்வுகளால் அவதிக்குள்ளாகும் மாணவர்கள்: ஈடிவி பாரத் விவாதம்