திருப்பூர்: திண்டுக்கல் செம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா (25) தேனியில் அடுமனை(Bakery) கடை ஒன்று நடத்தி வருகிறார். கார்த்திக் ராஜாவுக்கு சமூக வலைதளம் மூலம், பல்லடம் இடுவாய் பாரதிபுரத்தை சேர்ந்த டேவிட் பிரசாந்த் என்பவர் அறிமுகமாகியுள்ளார். டேவிட் பிரசாந்த் தன்னை ஒரு வழக்கறிஞர் என்று கூறி பழகியுள்ளார்.
இந்தநிலையில், டேவிட் பிரசாந்த் கார்த்திக் ராஜாவிடம் பல்லடத்தில் அடுமனையை குத்தகைக்கு எடுத்து இருவரும் நடத்தி லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
மேலும், இடுவாயிலுள்ள ஒரு அடுமனையை செல்போனில் படம் எடுத்து அனுப்பி உள்ளார். இதை நம்பி கார்த்திக் ராஜா டேவிட் பிரசாந்திற்கு 7 லட்சம் ரூபாய் வரை பணமும் அனுப்பியுள்ளார்.
இதற்கிடையில், கார்த்திக் ராஜா இடுவாய்க்கு வந்து பார்த்தபோது கடை திறக்கப்பட்டு வியாபாரம் நடைப்பெற்று கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். டேவிட் பிரசாந்தை தொடர்புகொண்டு கேட்டபோது கடை நமக்காக ஒதுக்கப்பட்டு விட்டது.
மேலும், மூன்று லட்சம் ரூபாய் கொடுத்தால் கடை நமக்கு சொந்தமாகி விடும் என கூறியுள்ளார். இதில், சந்தேகமடைந்த கார்த்திக் ராஜா அடுத்தடுத்த நாட்களில் டேவிட் பிரசாந்தை தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகியுள்ளது தெரியவந்தது.
இதுதொடர்பாக, கார்த்திக் ராஜா செங்கத்துறையில் உள்ள உறவினர் மூலம் விசாரித்துள்ளார். அதில் டேவிட் பிரசாந்த், அவரது மனைவி சத்யா ஆகியோர் தலைமறைவாகியுள்ளது தெரியவந்தது.
7 லட்சம் ரூபாய் மோசடி செய்ய தம்பதி மீது பல்லடம் டிஎஸ்பி அலுவலகத்தில் கார்த்திக் ராஜா நேற்று(ஆகஸ்ட் 31) புகார் அளித்தார். பல்லடம் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 1,512 பேருக்குக் கரோனா உறுதி