திருப்பூர் மாவட்டம் உடுமலை எலையமுத்தூர் பிரிவு அருகே வசித்து வருபவர் பழனிசாமி. இவர் உடுமலையில் உரக்கடை , பைனான்ஸ் தொழில்செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று(23.05.20) இரவு வீட்டில் குடும்பத்தாருடன் பழனிசாமி உறங்கி கொண்டிருந்தபோது, அதிகாலை மூன்று மணியளவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் தனியாக ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்த பழனிசாமியை கட்டிப்போட்டு, அவரது அறையிலிருந்த ரூ 20 லட்சம் பணத்தை கொள்ளையடித்ததோடு, 6 லட்சம் மதிப்புள்ள காரையும் கொள்ளையடித்து சென்றனர். பின்னர் காவல் துறையிடம் மாட்டிக்கொள்ளக்கூடாது என்ற நோக்கில் வீட்டில் மாட்டப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் எடுத்து சென்றனர்.
இதனிடையே பழனிசாமியின் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் உறங்கிக்கொண்டிருந்த அவரது மனைவி, மகள் அவரது அறைக்கு வந்து கட்டுகளை அவிழ்த்துவிட்டு அவரை மீட்டனர். இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். மேலும் திருப்பூர் மாவட்ட எஸ்.பி.திசாமிட்டல் மற்றும் கோவை சரக டி.ஐ.ஜி கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து விசாரணையை துரிதப்படுத்த உத்திரவிட்டனர்.
இதையும் படிங்க: தங்கம் வாங்கி தருவதாக மோசடி - பணத்தை இழந்த நபர் கைது!