திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் இந்து முன்னணி கோட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து எரித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்து முன்னணியினர் அப்பகுதியில் உள்ள கடைகளை அடைக்கச் சொல்லி வற்புறுத்தியதையடுத்து, கொங்கு மெயின் ரோடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.
மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க அங்கு பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. தொடர்ந்து, இச்சம்பவத்தைக் கண்டித்து திருப்பூரில் இருவேறு பகுதிகளில் அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இந்நிலையில் கார் எரிக்கப்பட்ட இடத்திலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சிசிடிவி காட்சிகளில் இரு வாகனங்களில் வந்த நான்கு அடையாளம் தெரியாத நபர்கள், காரின் முன் சக்கரத்தில் தீ மூட்ட முற்படுவது காட்சியில் பதிவாகியுள்ளது.