தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத் தொழிலாளர்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூரில் போக்குவரத்துத் தொழிலாளர்கள், போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த போக்குவரத்துத் தொழிலாளர்கள், காவல் துறையினரின் தடையை மீறி அலுவலகத்திற்குள் செல்ல முயன்றதால் காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர், காவல் துறையினரின் தடையை மீறி போராட்டக்காரர்கள் போக்குவரத்து மண்டல அலுவலகத்திற்குள் புகுந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதேபோல், திருநெல்வேலி போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு அரசுப் போக்குவரத்து அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தக் காத்திருப்புப் போராட்டத்தில் ஊதியம் குறித்த பேச்சுவார்த்தை, நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.
1998ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி அனைவரையும் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து அரசே ஓய்வூதியம் வழங்க வேண்டும். 240 நாளில் பணி நிரந்தரம் என்பதை உறுதிசெய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான போக்குவரத்து ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம்!