செல்ஃபோன் செயலி மூலம் தன்பால் சேர்க்கைக்கு வரவழைத்து அடையாளம் தெரியாத நபர்கள் வழிப்பறியில் ஈடுபடுவதாக தூப்பூர் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.
இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவந்த காவல் துறையினர், இந்தச் செயலில் ஈடுபட்டுவந்த 17 வயது சிறுவன் உள்பட பிரதீப் (19), சபரி (19) என்ற மூவரையும் கைது செய்துள்ளனர்.
நூதன வழிப்பறி எப்படி?
- செல்ஃபோனில் குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்வர்.
- செயலி மூலம் அடையாளம் தெரியாத நபர்களிடம் அறிமுகமாகி, தன்பால் சேர்க்கைக்காக ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு வரவழைப்பர்.
- பின்னர் ஆசைவார்த்தையில் மயங்கி வரும் நபர்களிடம் செல்ஃபோன், பணம், நகை, வங்கி அட்டை உள்ளிட்டவற்றை பறித்து தப்பியோடுவர்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், "தன்பால் சேர்க்கை என்ற பெயரில் வழிப்பறி செய்யும் கும்பல் இதுபோன்ற செயலிகளை அதிகளவில் பயன்படுத்திவருகின்றது. அவர்களது நோக்கமே வழிப்பறிதான்.
எனவே, இந்தச் செயலி மூலமாக அறிமுகமாகும் நபர்களை நம்பி யாரும் எங்கேயும் செல்ல வேண்டாம். ஆசைவார்த்தைக் கூறி வரவழைக்கும் நபர்கள் பணம், பொருளுக்காக உயிரையும் பறிக்க தயங்க மாட்டார்கள். எனவே, தடம் மாறி சென்றால் ஆபத்தை சந்திக்க நேரிடும். இதில், அதிகளவில் கல்லூரி மாணவர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்" எனத் தெரிவித்தனர்.