கரோனாவைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 3 நாள்கள் முழு ஊரடங்கு திருப்பூரில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருப்பூரில் காலை நேரங்களில் நேற்றுவரை செயல்பட்ட காய்கறிச்சந்தை, மளிகைக் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் காய்கறிகள், இறைச்சி, மீன், பால் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வீடுகளில் டெலிவரி செய்யப்படுகின்றன.
மேலும் பொதுமக்கள் மருந்து வாங்க செல்வதாகக் கூறிக்கொண்டு வெளியில் செல்வதைத் தடுக்கும் வண்ணம் மருந்தகங்கள் மூன்று நாள்களும் முழுமையாக அடைக்கப்படுகின்றன.
இந்நிலையில் காரணமின்றி வெளியில் சுற்றித்திரிபவர்களைக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்துவருகிறார்கள். அதன்படி, இன்று ஊரடங்கு மீறியதாக காலையிலேயே மாநகர எல்லைக்குள் 30 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். பொதுமக்களும் பெரும்பாலோனோர் வீடுகளில் முடங்கியிருப்பதால் கடந்த 30 நாள் ஊரடங்கைவிட, இன்று திருப்பூர் மிகவும் அமைதியான நிலையில் இருக்கிறது.
இதையும் படிங்க: ஊரடங்கில் போதையுடன் சுற்றிய அதிமுகவினர் - காரை பறிமுதல் செய்து விசாரணை!