புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் செங்காந்தள் எனும் கண்வலி விதை சாகுபடியில் பயன்படுத்தப்படும் வீரிய மிக்க ரசாயன பூச்சிமருந்துகளால் பல்லுயிர் சூழல் சங்கிலியில் கடும் பாதிப்பை பூச்சியினங்களின் மீது ஏற்படுத்தியுள்ளது.
இதனால், தேனீ, தட்டான், வண்ணத்துப்பூச்சிகள், குளவிகள் உள்ளிட்ட பூச்சி வகைகள் அழிந்துபோனதால் விவசாயிகள் செங்காந்தள் மலரில் செயற்கையாக மகரந்த சேர்க்கை செய்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் மூலனூர் தாராபுரம், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தோட்டக்கலைப் பயிராக செங்காந்தள் எனும் கண்வலி விதை சாகுபடி செய்யப்படுகிறது.
அந்த வகையில், ஆண்டுதோறும் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டு வருகிறது. விதைப்பு முதல் அறுவடை வரை ஏக்கருக்கு மூன்று முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவு செய்து பயிரிட்டு விதை உற்பத்தி செய்கின்றனர்.
செங்காந்தள் விதை புற்றுநோய்க்கான மருந்துகள் தயாரிப்பில் மூலப்பொருளான கோல்சிசின் இதில் அதிகம் இருப்பதால் விதைகள் கிலோ 2500 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை விற்பனை செய்யபடுவதும், இப்பகுதியில் காணப்படும் மண்ணின் தன்மையாலும் நல்ல விளைச்சலை தரக்கூடியதாக இருப்பதால் விவசாயிகள் செங்காந்தளை மட்டுமே பணப்பயிராக பயிரிட்டு வருகின்றனர்.
கண்வலி விதையின் கொள்முதல் விலை ஏற்ற இறக்கத்தில் இடைத்தரகர்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் மற்ற பயிர்களை விட நல்ல லாபம் கிடைக்கிறது.
இதன் காரணமாக கொடி அழுகல், பூ கருகுதல், வாடல் நோய் உள்ளிட்டவை செங்காந்தள் பயிர்களில் ஏற்ப்பட்டால் உடனடியாக விவசாயிகள் மிக வீரிய மிக்க பூச்சி மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் நோய் தாக்குதல் ஏற்பட்ட போதெல்லாம் வீரியமிக்க பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதையே கணக்குவழக்கில்லாமல் செய்துள்ளனர்.
மேலும் தோட்டக்கலை பயிராக இது இருக்கும் நிலையில், மாநில அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் இந்த பயிருக்கு அங்கீகாரம் எதுவும் கொடுக்கப்படவில்லை.
நோய் தாக்குதலின் போது என்ன மருந்துகளை பயன்படுத்தலாம், நோய் தாக்காமல் எப்படி தடுக்கலாம் என்பது போன்ற ஆலோசனைகள், புதிய தொழில்நுட்பங்களை தோட்டக்கலைத்துறை இதுவரை அளிக்கவில்லை என்பது விவசாயிகளின் பெரும் குற்றச்சாட்டாக உள்ளது.
இதையும் படிங்க: