திருப்பூர் : அவிநாசியை ராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பனியன் நிறுவனத் தொழிலாளி சந்திரன். இவரது மனைவி பரிமளா. அவிநாசி பேரூராட்சியில் ஒப்பந்த சுகாதார ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். சந்திரன், அதே பகுதியைச் சேர்ந்த தனசேகர் என்பவரிடம் கடந்த நான்கு மாதங்கள் முன்பு 100 ரூபாய்க்கு வாரம் 10 ரூபாய் வட்டி என்ற அடிப்படையில் 27 ஆயிரம் ரூபாய் பணம் கந்துவட்டிக்கு வாங்கியுள்ளார்.
வாராவாரம் பணம் கொடுத்து வந்த நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு 10 ஆயிரம் ரூபாயை திருப்பி செலுத்தியுள்ளார். மீதி 17 ஆயிரம் ரூபாயை உடனே தரவேண்டும் எனக் கூறி தகாத வார்த்தைகளால் பேசி கடந்த சில நாட்களாக தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திங்கள் கிழமை இரவு சந்திரன் வீட்டில் இல்லாதபோது அங்கு சென்ற தனசேகர் மற்றும் அவரது தாயார் பூவாத்தாள், வீட்டில் குழந்தைகளுடன் இருந்த பரிமளாவை சாதிப்பெயரை சொல்லி தகாத வார்த்தைகளில் திட்டியதுடன், கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த பரிமளா வீட்டினுள் மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து குழந்தைகள் மூலம் சந்திரனுக்கு தெரியவர சந்திரன் அளித்த புகாரின் பேரில் அவினாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனசேகரை கைது செய்தனர்.
இதையடுத்து தனசேகரனின் தாயார் பூவாத்தாளையும் கைது செய்து பரிமளா குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையினை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும்; பரிமளா-வின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பரிமளாவின் உறவினர்கள் மற்றும் பட்டியலின அமைப்பினர் சிலர் உடலை வாங்க மறுத்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த தனசேகரின் தாயார் பூவாத்தாள் (எ) துளசிமணி (55) என்பவரை, ஈரோடு திண்டலில் வைத்து அவிநாசி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து பரிமளாவின் உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.
இதையும் படிங்க : புதிய மாவட்டத்திற்கு பெயர் வைப்பது தொடர்பான விவகாரம் - ஆந்திராவில் அமைச்சர் கார் எரிப்பு!