திருப்பூர்: தாராபுரம் அருகேயுள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து பிஏபி பிரதான வாய்க்காலில் அரசூர் சட்டையில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினருக்கு ஆதரவாக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவரும், காங்கேயம் சட்டப்பேரவை உறுப்பினருமான தனியரசு, மக்கள் நீதி மய்யத்தின் திருப்பூர் தென் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆர். பாலசுப்பிரமணியன் வாயில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுப்பணித்துறை அலுவலர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதுகுறித்து காங்கேயம் சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசு கூறுகையில், " உப்பாறு அணை, காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது. அக்காலத்தில் உப்பாறு பாசனத்தின் மூலம் 6,400 ஏக்கர் நீர் பாசனம் பெற்று மூன்று போகங்கள் விளைந்தது.
ஆனால், அதன்பிறகு வந்த பொதுப்பணித்துறையினர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் வழங்கவில்லை. திருமூர்த்தி அணையிலிருந்து பிஏபி வாய்க்கால் மூலம் தண்ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது. இதில், ஆலை முதலாளிகளும், பெரிய தொழில் நிறுவனங்களும் முறைகேடாக தண்ணீரைத் திருடி வருகின்றனர். தண்ணீரைத் தவறாக பயன்படுத்துவோர் மீது அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தாராபுரம் சார் ஆட்சியர் உள்ளிட்டோர் விவசாயிகளை நேரில் அழைத்து பேசவேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு இந்த விஷயத்தை கொண்டு சென்று அணைக்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை முழு முயற்சியில் ஈடுபடும்" என்றார்.
இதையும் படிங்க: ஆனைமலை உப்பாற்றில் ஆகாயத் தாமரைகளை சுத்தம் செய்யும் பணி!