திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த ராசிபாளையம் என்ற இடத்தில் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் என்ற நிறுவனத்தின் சார்பில் மின் ஆற்றல் சேமிப்பு நிலையம் (பவர்ஹவுஸ் ஸ்டேசன்) அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து கேரள மாநிலத்திற்கு மின்சாரத்தை கொண்டுசெல்ல விவசாய விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்களை அமைத்து கம்பி வழியாக மின்சாரம் கொண்டுசெல்லும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இதற்காக தாராபுரத்தை அடுத்த வேங்கி பாளையம், சூரிய நல்லூர் பகுதிகளில் ஏராளமான விவசாயிகளின் விளைநிலங்களில் அவர்களது அனுமதி இன்றி உயர்மின் கோபுரத்தை அமைத்துள்ளனர்.
தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் தன்னிச்சையான செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு வெளிச்சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்ட இடத்திற்கு மாத வாடகையாக ஒரு தொகையை நிர்ணயித்து வழங்க வேண்டும் என்றும், கோரிக்கைவிடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் வேங்கி பாளையம் பாறை காட்டு தோட்டம் லட்சுமி அம்மாள் என்ற மூதாட்டிக்குச் சொந்தமான விளைநிலத்தில் அவரது அனுமதி இன்றி அமைக்கப்பட்ட உயர்மின் கோபுரத்திற்கு உரிய இழப்பீடு கேட்டு அப்பகுதி விவசாயிகள், 'உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம்' சார்பில் தங்களது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுடன் மின்கோபுரம் அமைக்கப்பட்ட இடத்தில் திரண்டு நின்றும், உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி நின்றும் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
"உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்ட இடத்திற்கு இழப்பீடு கேட்டு பலமுறை போராட்டம் நடத்தியும் புகார் மனுவை அளித்தும் மாவட்ட நிர்வாகம் தீர்வு காண மறுத்துவருகிறது.
இந்த முறை மின் கம்பத்தில் ஏறி நின்று போராட்டம் நடத்திய நாங்கள் அடுத்த முறை மின் கம்பத்தின் உச்சியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்ள வேண்டியிருக்கும்" என ஆவேசத்துடன் போராட்டத்தின்போது கூறினர்.
மேலும் 1947ஆம் ஆண்டுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட தந்தி கம்பி சட்டத்தின்படி விளைநிலங்களில் அமைக்கப்பட்ட மின் கோபுரங்களுக்கு இழப்பீட்டை நிர்ணயித்து ரூ.30 லட்சம் இழப்பீடு கிடைக்க வேண்டிய நிலத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு தருவதாகக் கூறுவது நியாயமற்ற செயல் என்றும், விவசாயிகளின் அறியாமையை தமிழ்நாடு அரசு அறுவடை செய்ய வேண்டாம் என்றும் ஆர்ப்பாட்டத்தின்போது விவசாயிகள் தங்களது வேதனையை வெளியிட்டனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அப்பகுதி விவசாயிகளுக்கு வழங்கிய இழப்பீட்டைப் போல திருப்பூர் மாவட்ட ஆட்சியரும் வழங்க முன்வர வேண்டும், இல்லை என்றால் விவசாயிகளின் போராட்டம் தொடரும் எனக் கூறினர்.
உயர்மின் கோபுர பகுதியில் கால்நடைகளுடன் விவசாயிகள் திரண்டு கோபுரத்தின் மீது ஏறி நின்று நடத்திய நூதன போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.