திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள குள்ளாய்கவுண்டர்புதூரைச் சேர்ந்தவர் விவசாயி ரங்கசாமி (வயது 35). இவர் தனது தாயாருக்கு சொந்தமான சொத்துக்கு இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்ய இணையம் மூலம் விண்ணப்பித்துள்ளார். பின்னர், வரப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் வேலுச்சாமியை நேரில் சந்தித்த ரங்கசாமி, பட்டா மாறுதல் செய்து தருமாறு கேட்டுள்ளார்.
அப்போது கிராம நிர்வாக அலுவலர், ரங்கசாமியிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என விவசாயி ரங்கசாமி தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் கிராம நிர்வாக அலுவலர் விடாமல் ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமாவது தற்போது கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என்று வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து ஆயிரத்து 500 ரூபாயை மட்டும் கொடுத்துள்ளார் விவசாயி ரங்கசாமி. அதை வாங்கிக்கொண்ட கிராம நிர்வாக அலுவலர், விரைவில் பட்டா மாறுதல் செய்து தரப்படும். இது தொடர்பாக நிலமளப்போரை பாருங்கள் எனக் கூறி அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, விவசாயி ரங்கசாமி இது தொடர்பாக நிலமளப்போரை சந்தித்து பட்டா மாறுதல் குறித்து கேட்டுள்ளார். ஆனால், பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பம் தன்னிடம் இதுவரை வரவில்லை என நிலமளப்போர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த ரங்கசாமி மண்டல துணை வட்டாசியரிடம் இது குறித்து முறையிட்டுள்ளார். அவரும் கிராம நிர்வாக அலுவலரை சந்திக்கும்படி அறிவுறுத்தவே, விவசாயி ரங்கசாமி, கிராம நிர்வாக அலுவலர் வேலுசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது, தான் நிலமளப்போர், மண்டல துணை வட்டாச்சியர் ஆகியோரிடம் பேசிய விவரத்தையும் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த கிராம நிர்வாக அலுவலர், தான் கேட்ட லஞ்சப் பணத்தை தராமல் குறைத்து கொடுத்ததோடு, தன்னைப்பற்றி மேல் அலுவலர்களிடம் ரங்கசாமி தவறாகப் பேசியதாகக் கூறி, தரக்குறைவாகத் திட்டியுள்ளார்.
இந்நிலையில், விவசாயி ரங்கசாமியிடம் கிராம நிர்வாக அலுவலர் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்களிடம் விவசாயி ரங்கசாமி புகார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க...தென்காசியில் பள்ளிவாசல் உண்டியலை உடைத்து திருட்டு: இருவர் கைது!