அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்த மாதம் இரண்டாம் தேதி குறும்படங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் 60 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு குறும்படங்கள் போட்டியிட்டன. இதில் திருப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணன் மற்றும் கவிதா தம்பதியின், ஒன்பது வயது மகள், மகா ஸ்வேதா சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதைப் பெற்றுள்ளார்.
சிறுவயது முதல் சேமிக்கும் பழக்கம் கொண்ட மகாஸ்வேதா, தான் சிறுக சிறுக சேமித்த பணத்தை இறுதியாக பெற்றோரிடம் கொடுத்துள்ளார். அதில் ஒன்றரை இலட்சம் ரூபாய் இருந்திருக்கிறது. அப்போது தனக்கு குறும்படத்தில் நடிக்கும் ஆசை உள்ளதாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் .
இதனைக் கேட்ட சிறுமியின் பெற்றோரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் சுஜித் என்பவரை அணுகினர். அவர் மூலம் பெற்றோர்கள் குழந்தைகளை கவனிக்காமல் கணினி மற்றும் மொபைல் போன்களில் மூழ்கி இருப்பதால், குழந்தைகளின் மனநிலையில் ஏற்படும் மாற்றம் குறித்து ”ஆறு பாயும்” என்ற மலையாள குறும்படத்தை எடுத்துள்ளனர். இந்த குறும்படத்தில் நடித்ததற்காக மகா ஸ்வேதாவிற்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கிடைத்துள்ளது.
இதுகுறித்து மகாஸ்வேதா தெரிவிக்கையில் தனக்கு மிகப்பெரிய பிரபலமாக வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும்; தற்போது இதுபோன்ற குறும்படத்தை எடுக்க தனது பெற்றோர் இதற்கு மிகவும் உதவிகரமாக இருந்ததாகவும் தெரிவித்தார் .