திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் சந்திரகுமார் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் , மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமியிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார்.
அப்போது அவரது சட்டையில் அவர்களது கட்சியின் சின்னமான டார்ச் லைட் பொறிக்கப்பட்டிருந்ததால் அதனை அதிகாரிகள் மாற்றி வர வலியுறுத்தினர். இதனால் கம்பீரமாக வந்த அவர் சின்னத்தை கையால் மறைத்தவாறு வெளியே சென்று பின் மீண்டும் சட்டையை மாற்றி வந்து வேட்புமனுவினை தாக்கல் செய்தார் . இதனால் அவர் வேட்புமனுதாக்கல் செய்வதற்கு சற்று கால தாமதம் ஆனது .
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சட்டையை கழற்றாத குறைதான். எங்களை சோதனை செய்யும் அதிகாரிகள் இங்கு அடிப்படை குடிநீர் வசதி கூட செய்யவில்லை," என குற்றம் சாட்டினார்.
தேர்தல் குறித்து பேசிய அவர், "திருப்பூர் மாவட்டம் மற்றும் அதனை சார்ந்த கிராமங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் எவ்வாறு இருந்ததோ அதே நிலையில்தான் தற்போதும் இருக்கிறது. திருப்பூரில் தொழில் வளர்ச்சி ஜிஎஸ்டி, டிராபேக் நிலுவை ஆகியவற்றால் முடங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தொழில்வளம் மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த கோரிக்கையை முன்வைத்து தேர்தலில் போட்டியிடுவோம்." என்று தெரிவித்தார்.