திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, "பெட்டியில் மனு வாங்குவதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏளனமாக பேசுகிறார். பெட்டி என்றால் பணப்பெட்டிதான் அவருக்கு நியாபகம் வரும். மக்கள் பிரச்னைகள் குறித்து அவருக்குத் தெரியாது. அவரை வீட்டுக்கு அனுப்பும் கோரிக்கை பெட்டிதான் இது. இன்னும், இரண்டு மாதங்களில் அதிமுக ஆட்சி இருக்காது, இந்த சூழ்நிலையில், 4 தினங்களுக்கு முன் வானத்தை தொடும் அளவிற்கு அறிவிப்புகளை முதலமைச்சர் கொடுத்துள்ளார்.
மேலும், 10 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு ஈர்க்கப்போவதாகவும், 20 லட்சம் பேருக்கு வேலை தரப்போவதாகவும் கூறியுள்ளார். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக இவர் என்ன செய்தார் இவரின் அறிவிப்புகள், கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டம் காட்டுவதைப் போல் உள்ளது. முதலமைச்சரின் சாதனை என்பது ரூ. 1 லட்சம் கோடியாக இருந்த மாநிலத்தின் கடனை ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்திதான்.
இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைக்கவில்லை. 2017 முதல் தமிழ்நாட்டில் ரயில்வே துறை, அஞ்சல் துறை, வருமான வரித்துறை மற்றும் வங்கிகளில் வட மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்பட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். பெயரில் மட்டும்தான் தமிழ்நாடு ஆனால், இங்கு தமிழர்களுக்கு வேலை இல்லை. சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் 42 பேரை வேலைக்கு எடுத்தனர். அதில், ஒருவர்கூட தமிழர் இல்லை.
90 லட்சம் பேர் வேலை கேட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்துக்கொண்டிருக்கின்றனர். புதிய வேலைவாய்ப்புகள் இந்த ஆட்சியில் உருவாக்கப்படவில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பச்சை வண்ணம் அடித்து மினி கிளினிக் தொடங்கியதைப் போல், தற்போது புதிய அறிவிப்பை பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
5 சவரன் வரை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக் கடன், கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற கடன்கள் ஆகியவை ரத்து செய்யப்படும், மகளிர் குழுக்கள் சீரமைக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்: உதயநிதி!