திருப்பூர், பின்னிகாம்பவுன்ட் வீதியிலிருந்து உணவு டெலிவரிக்காக வேகமாக வந்த ஸொமெட்டோ (Zomato) டெலிவரிபாய் ஒருவர், குமரன் சாலை வளைவில் அருகே வந்த காரில் மோதியுள்ளார்.
மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டியது மட்டுமல்லாமல், அவர் உணவு டெலிவரிக்கு செல்வதை அறிந்த அந்த காரில் இருந்தவர்கள்
டெலிவரிபாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், ஆத்திரமடைந்த டெலிவரிபாய் தனது இருசக்கர வாகன சாவியைக் கொண்டு அவர்களின் கழுத்தில் தாக்கியுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் அவரை தடுக்க முற்பட்டுள்ளனர்.
தடுக்க வந்தவர்களையும் அந்த டெலிவரிபாய் கடுமையாக தாக்கவே, ஆத்திரமடைந்த பொதுமக்களும், அந்தக் காரில் வந்தவர்களும் அவரை சரமாரியாக தாக்கத் தொடங்கினர். இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த ஸொமெட்டோ ஊழியரை அருகில் இருந்த காவலர்கள் இணைந்து காப்பாற்றி அனுப்பிவைத்தனர்.
மது போதையில் உணவுகளை டெலிவரி செய்ய வாகனத்தை இயக்கியதுடன் விபத்தை ஏற்படுத்தி அனைவரையும் தாக்கியது ஆன்லைன் உணவு வர்த்தகம் குறித்த தவறான கருத்தை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.