கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் கரோனா பரவலைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் நிலவிவரும் பிரச்னைகளை கூறி நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரடியாக வலியுறுத்த வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டுவருகிறது. இதன் காரணமாக பொது மக்கள் தமது கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் மனு பெட்டியில் போட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சீரான குடிநீர் வழங்கப்பெறாமல் பாதிக்கப்பட்டு வந்த திருப்பூர் மாநகராட்சியின் மூன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட பச்சையப்பர் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து தாங்கள் கொண்டு வந்த கோரிக்கை மனுவை பெட்டியில் போட்டுச் சென்றனர்.
அவர்கள் கொடுத்த மனுவில், “திருப்பூர் மாநகராட்சியின் மூன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட பச்சையப்பர் நகரில் நாங்கள் வசித்துவருகிறோம். எங்கள் பகுதியில் குடிநீர் வசதி கிடையாது. ஆழ்துளைக் கிணறு வசதிகளும் செய்து தரப்படவில்லை. இதுபற்றி பலமுறை மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும் எவ்வித பதிலும் உரிய அலுவலர்களிடமிருந்து வரவில்லை.
அதே போல, பல நாள்களாக எங்கள் பகுதியில் சாக்கடை கழிவு நீர் தேங்கியுள்ளது. இது தொடர்பாக தொடர்ச்சியாக முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
எங்கள் பகுதிக்கு மூன்றாவது குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.