திருப்பூர்: திருப்பூர் செவந்தாம்பாளையம் கே.ஆர்.எஸ் தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் மணி என்ற எஸ்.எம்.ஈஸ்வரமூர்த்தி. இவரது மனைவி காந்திமதி திருப்பூர் மாநகராட்சில் 58வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இந்த நிலையில், இவர்கள் இருவரும் நேற்று (ஜூலை 5) திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்தனர்.
அந்த புகார் மனுவில், "புதுப்பாளையம் 60வது வார்டு பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் செந்தில்குமார் கடந்த 4 ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கே.செட்டிபாளையத்தில் ஒன்றே முக்கால் சென்ட் இடத்தில் வீடு இருப்பதாகவும், அதில் அவர் குடியிருப்பதாகவும், வீட்டின் முன்பு பள்ளம் இருப்பதால் அதை சரி செய்ய 58வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ள எனது மனைவியும், நானும் மூன்று லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் பொய்யான புகார் அளித்துள்ளார்.
மேலும் செந்தில்குமார், அமமுக பிரமுகரிடமிருந்து ஒன்றே முக்கால் சென்ட் இடத்தை தான் வாங்கி உள்ளதாகவும், அந்த இடத்தின் முன்புறம் உள்ள நடைபாதை சந்தை இடம் மாற்றி அமைக்க வேண்டும், ஊர் பொதுமக்களும், பக்கத்து வீட்டினரும் பிரச்னை செய்து வருவதாகவும் என்னிடம் தெரிவித்தார்.
இது மட்டும் இன்றி நான் கவுன்சிலரின் கணவராக இருப்பதால், மேற்கூறிய பிரச்னையை பேசி முடித்துக் கொடுங்கள் என கூறி பலமுறை என் வீட்டிற்கு நேரில் வந்து செந்தில்குமார் கேட்டார். அதற்கு நான் தங்கள் வாங்கியதாக கூறும் சொத்தின் ஆவணங்களை கொண்டு வருமாறும், அதன் அளவுகளை சரி பார்த்து ஆவணம் செய்கிறேன் எனக் கூறி அனுப்பி வைத்தேன்.
இதனையடுத்து, அவர் கூறியதன் அடிப்படையில் ஊர் பொதுமக்களிடம் நான் விசாரித்தபோது அந்த இடம் செந்தில்குமார் பெயரில் இல்லை எனவும், வழித்தடத்தை அடைத்து மணலைக் கொட்டி பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார் எனவும் தெரிய வந்தது. மேலும், ஊர் பொதுமக்களிடம் தொடர்ந்து சண்டை இடுவதால் ஊர் பொதுமக்கள் சார்பில் செந்தில்குமார் மீது நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நான் பணம் பெற்றுக் கொண்டதாக கூறி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித்து, அதன் மூலம் செய்தி தொலைக்காட்சி சேனல்களில் செய்திகளை வரவழைத்து, அதனை இணையதளங்களில் பரப்பி வருகிறார்.
இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே, செந்தில்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தை அரசியல் ஆக்குவது வருத்தம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்