திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி மார்க்கெட்ரோடு புதியபேருந்துநிலையம், பழையபேருந்துநிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபார நிறுவனங்கள், உணவகங்கள், பழக்கடைகள், தேநீர்விடுதி, பேக்கரிகள் உள்ளிட்டவற்றில் நகராட்சி அலுவலர்களால் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கேரிபேக், காலாவதியான உணவுப்பொருட்கள் ஆகியவை பயன்பாட்டில் இருந்ததை ஆரணி நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேல் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்து அங்கேயே அழித்தனர். பின்னர் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனிடையே ஆரணி டவுன் பழைய பேருந்துநிலையம் மணிகூண்டு பகுதி அருகே திமுக பிரமுகர் அன்சர்பாஷா என்பவருக்கு சொந்தமான பைவ் ஸ்டார் பிரியாணி உணவகம் உள்ளது. இந்த பிரியாணி கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக்குகள் பயன்பாட்டில் இருந்ததை பறிமுதல் செய்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேல் நடவடிக்கை மேற்கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த திமுக பிரமுகர் நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று சுகாதார ஆய்வாளர் குமரவேலை, ''ஆய்வு செய்ய அதிகாரம் உனக்கு உள்ளதா, 40 ஆண்டு காலம் தொழில் செய்கிறேன். மூன்று முறை நகராட்சி திமுக கவுன்சிலர். எனக்கு சட்டம் தெரியும், திடீர் ரெய்டுக்கு வருவதாக சொல்லிவிட்டுத்தான் வரனும். உன்னுடைய அதிகாரம் என்னவென்று எனக்குத் தெரியும்'' என மிரட்டினார். இந்த சம்பவம் அப்பகுதியினரிடயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கல்லூரி பேராசிரியை கடத்தல் - அதிமுக பிரமுகர் மீது புகார்