தமிழகம் மீட்போம் என்ற திமுகவின் காணொலி வாயிலான பரப்புரை இன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது. யூனியன் மில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் உட்பட மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், திருப்பூரின் மத்திய, வடக்கு, தெற்கு, கிழக்கு உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்களும் , ஆ.ராசா, கார்த்திகேய சிவசேனாபதி உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் காணொலி வாயிலாக பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "திருப்பூரில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ரிங் ரோடு , பாலங்கள் கட்டும் பணிகள் ஆகியவை ஆதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. இதனால் தற்போது வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது.
சிறு குறு நிறுவனங்கள் செயல்பட முடியாமல் திணறி வருவதற்கு முழு காரணம் மத்திய, மாநில அரசுகள் தான். தொழிலாளர்களின் உடல் நலன் காக்க தற்போது வரை திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை உருவாக்கப்படாமல் உள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி , தங்கமணி , உடுமலை ராதாகிருஷ்ணன் , கருப்பண்ணன் ஆகியோர் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள். இருப்பினும் அவரகள் தங்கள் பகுதிகளுக்கு எவ்வித திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.
8 வழி பசுமைச்சாலை திட்டம், வேளாண் மசோதாவிற்கு ஆதரவு என விவசாயிகளுக்கு பெரும் துரோகத்தை இழைத்து வருகிறார். திருப்பூரில் தொழில் வளர்ச்சி பெரிதளவில் இல்லாததற்கு அரசின் தவறான பொருளாதார கொள்கையே காரணம். டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர் தற்போது டல் சிட்டியாக உள்ளது. மேலும், 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றவுள்ளதாகவும் தெரிகிறது.
கார்ப்பரேட் க்கு நாட்டை விற்பவர்கள், நாட்டுப்பற்றை விளக்க வேண்டிய அவசியமில்லை. திமுக ஆட்சி அமைந்ததும் பல்வேறு தொழில் துறையை சேர்ந்த வல்லுநர் குழு உருவாக்கப்பட்டு, அவர்களின் ஆலோசனையின் பேரில் தொழில் சிறக்க ஆட்சி செய்யப்படும்" என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க:நெருக்கடி காலத்தில் கலாசாரம் முக்கிய பங்காற்றியது - பிரதமர் மோடி