திருப்பூர்: கல்லம்பாளையம் பகுதியில் குடிநீர் குழாய் கசிவை அடைக்காமல் சாலை அமைக்க முயன்ற மாநகராட்சி ஒப்பந்ததாரரை எதிர்த்து பொதுமக்கள் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்ததால், பொதுமக்களுக்கும், துணை மேயர் பாலசுப்பிரமணியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், கல்லம்பாளையம் பகுதியில் பிள்ளையார் கோவில் வீதியில், மாநகராட்சி சார்பில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அங்குள்ள கோயில் அருகில் குடிநீர் கசிவு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாகிச் செல்லும் நிலையில், குடிநீர் கசிவு ஏற்படும் குழாயை அடைக்காமல், அதன் மீது சாலை அமைக்க மாநகராட்சியினர் முயற்சி மேற்கொண்டனர்.
இதனால், அப்பகுதி மக்கள் ஒன்றாக திரண்டு, சாலை அமைக்க வந்த ஒப்பந்ததாரரை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் கசிவினை அடைக்காமல் சாலை அமைக்கக் கூடாது என்று அவர்கள் சாலை அமைக்கும் பணியைத் தடுத்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து, இது குறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் முறையிட்டனர்.
இதையும் படிங்க: கோவையில் கொட்டித்தீர்த்த கனமழை.. மீன் பிடித்த இளைஞர்கள்.. பாடல் பாடி மகிழ்ந்த மதுப்பிரியர்..
இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். செய்தியாளர்களை அழைத்துச் சொன்னால் அவர்கள் வந்து வேலை செய்து தருவார்களா என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, பிரச்னை குறித்து பொதுமக்கள் கூறுகையில், “3 மாதமாக மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பத்திரிகையாளர்களுக்கு தகவல் தெரிவித்தோம். ஏற்கனவே உள்பகுதியில் குடிநீர் கசிவு ஏற்பட்ட நிலையில், அவற்றை நாங்கள்தான் சரி செய்தோம். மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று கூறினர். இதனையடுத்து, துணை மேயர் பாலசுப்பிரமணியம், குடிநீர் கசிவை அடைப்பதற்கான பணிகளை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை; இன்று 7 லட்சம் பேருக்கு ரூ.1,000 வரவு.. முதலமைச்சர் தலைமையில் விழா!