விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரைச் சேர்ந்த ஏழுமலை (32). சவரத் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சசிகலா (27). தம்பதியருக்கு 11 வயதில் ஆண், 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இன்று(அக்.9) திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு குழந்தைகளுடன் வந்த தம்பதியர், திடீரென மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள், உடனடியாக தம்பதியரைத் தடுத்தனர். தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற தம்பதியரிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு மே மாதம் பாப்பநாயக்கன்பாளையம் பவானி நகர் 2ஆவது வீதியில் 3 சென்ட் நிலத்தை ஆறுமுகம் என்பவரிடம் ரூ. 27 லட்சத்துக்கு நானும், எனது அண்ணன் சரவணன் (40) ஆகியோர் வாங்கினோம்.
நிலத்தை கிரையம் செய்து, பட்டா, சிட்டா அனைத்தும் பெற்றுவிட்டோம். விலைக்கு வாங்கிய வீட்டில் குடியேறச் செல்லும்போது ஆறுமுகத்தின் மைத்துனர் பழனிசாமி, எங்களை குடியேற விடாமல் தடுத்து வந்தார். எங்களை சாதியை குறிப்பிட்டு அடையாளப்படுத்தி அனுமதிக்கவில்லை. இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு காவல்துறையினரிடம் புகார் அளித்தோம்.
அவர்களும் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் விலைக்கு வாங்கி முறைப்படி பதிவு செய்த எங்கள் இடத்தை பயன்படுத்த தர மறுக்கின்றனர். அங்குள்ள சுற்றுச்சுவருக்கு பூட்டு போட்டு தொடர்ந்து பிரச்சினை செய்கின்றனர். எனது அண்ணனுடன் சேர்ந்து வட்டிக்கு கடன் பெற்று வீடு வாங்கினேன். இன்றைக்கு என்னால் வட்டி கட்ட முடியவில்லை.
வீட்டை கேட்டால் பலரும் கும்பலாக வந்து மிரட்டுகின்றனர். போலீஸாரிடம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காததால், குழந்தைகளுடன் எங்களுக்கு வாழ வழி தெரியவில்லை. ஆகவே தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொள்ள இங்கு வந்தோம்" என்றனர். விசாரணைக்குப் பின்னர் தம்பதியரை சமாதானம் செய்த காவல் துறையினர், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு வாகனத்தில் அழைத்து சென்றனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகளுடன் தம்பதியரை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.