திருப்பூர் மாவட்டம் பத்மாவதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஈஸ்வரமூர்த்தி (62), கலைமணி (45) தம்பதியர். இவர்கள் அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்திவந்துள்ளனர். பல வருடங்களாக சீட்டு நடத்தி வந்ததால் இதை நம்பிய 100க்கும் மேற்பட்டவர்கள் இவர்களிடம் பல லட்சம் ரூபாய் வரையில் பணம் கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் சீட்டு காலம் முடிந்த பின்னரும் அவர்களுக்கான தொகையை தம்பதியினர் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
பணம் கட்டியவர்கள் தொடர்ந்து பணத்தை தருமாறு வற்புறுத்தி வந்துள்ளனர். எனினும் ஈஸ்வரமூர்த்தி - கலைமணி தம்பதி பணத்தை தராததால், பாதிக்கப்பட்ட வளையங்காடு பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர், இது தொடர்பாக திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு காவலரிடம் புகார் கொடுத்தார்.
அதன்படி ஈஸ்வரமூர்த்தி, அவரது மனைவி கலைமணி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை கைது செய்தனர். விசாரணையில் பலரிடம் ஏலச்சீட்டு என்ற பெயரில் ஒரு கோடி ரூபாய் மோசடியில் இருவரும் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இந்த தம்பதியினர் வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளனரா? என்பது குறித்தும் தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'காதல் கணவன் எனக்கு வேணும்' - வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண் !