உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் கறிக்கோழி இறைச்சியின் மூலம் தான் பரவுகிறது என்று சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதையடுத்து மக்கள் பலரும் சிக்கன் உண்பதை நிறுத்தியுள்ளனர். இதனால், கறிக்கோழி முட்டை விற்பனை குறைந்து விலை பெரும் சரிவைச் சந்தித்துள்ளன.
கறிக்கோழி விற்பனை சரிவிலிருந்து மீண்டு வருவதற்குள் பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டதையடுத்து மீண்டும் கறிக்கோழி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கோழிப்பண்ணை உரிமையாளர் சுதாகர், ”கொரோனா வைரஸ், பறவை காய்ச்சல் பீதியால் கறிக்கோழி விற்பனை கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினந்தோறும் 50 லாரிகளில் செல்லும் கறிக்கோழி தற்போது 20க்கும் குறைவான அளவிலேயே ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
ஒரு கிலோ கோழியின் உற்பத்தி செலவு 80 ரூபாய் ஆனால் தற்போது அது 20 ரூபாய்க்கும் குறைவான விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக அரசு உடனடியாக கவனம் செலுத்தி கோழிப்பண்ணை உரிமையாளர்கள், கறிக்கோழி உற்பத்தியாளர்களின் துயரத்தைப் போக்க வேண்டும்” என்றார்.
முன்னதாக, திருப்பூர் கறிக்கோழி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த வதந்தியை நம்பி அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் கறிக்கோழிகள் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
இதையும் படிங்க : 25,000 சோப்புகளை பயன்படுத்தி பள்ளி மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு