தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனா தொற்றால் 485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் இறந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் கடந்தவாரம் இறைச்சி மீன் கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டமாகக் குவிந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கூட்டத்தை கட்டுப்படுத்த தன்னார்வலர்கள் குழு, காவல்துறையினருடன் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். அதன்படி, இன்று இறைச்சி மற்றும் மீன் கடைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் விஜய கார்த்திகேயன், "இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் கூடாதவாறு சமூக ஆர்வலர்கள், காவல் துறையினரைக் கொண்டு ஒழுங்குப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. திருப்பூரில் இன்று வரை 1,114 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மூன்று பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், இன்னும் 50க்கும் மேற்பட்டோருக்கான பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளன.
எனவே, பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இருப்பினும் தங்களைத் தாங்களே பாதுகாத்து கொள்ள ஊரடங்கு முடியும் வரை வீட்டில் இருக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: சேலத்தில் ஒன்பது பேருக்கு கரோனா தொற்று!