கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளை மத்திய மாநில அரசுகள் மூட உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவித்து முடக்க உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரில் ஏற்றுமதி இறக்குமதி என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள், அதன் உப நிறுவனங்களான சாய ஆலை, பிரிண்டிங், எம்ப்ராய்டரி, வாஷிங் என பல நிறுவனங்களும் அவற்றில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஒவ்வொரு நிறுவனத்திலும் 50 முதல் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடி ஏற்றுமதியும் 12 ஆயிரம் கோடி உள்நாட்டு வர்த்தகம் என 48 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் பகுதியாக திருப்பூர் விளங்கிவருகிறது.
கோடை காலங்களில் மட்டும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி வர்த்தகம் நடைபெறும் நிலையில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தலைமையில், ஏற்றுமதியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா சண்முகம், 31ஆம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் மூடப்படும் எனவும், வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு கருதி அவர்கள் இருக்குமிடத்திலேயே இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு தான் ஏற்க வேண்டும் என்றும், தற்போதைய சூழலில் ஏழு ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதி சிக்கலில் ஏற்றுமதி நிறுவனங்கள் இருப்பதாகவும் கடந்த மூன்று மாதங்களில் ஏற்றுமதி செய்த ஆறு ஆயிரம் கோடி ரூபாய் தொகை இன்னும் வரவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், அரசு தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்த ராஜா, தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவதை எங்களால் பார்த்துக் கொள்ள முடியும் என்றும், கடன் தவணைகளை செலுத்துவதில் அவகாசம் வழங்க அரசு முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.