தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இந்த வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தூய்மைப் பணியாளர்கள் கடினமாக உழைத்து வருகின்றனர். இவர்களின் சேவையை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்நிலையில், மாநில அரசு வழங்குவதாக கூறிய சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர், மாட்டு கொட்டகை பகுதியில், சிஐடியு ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பாக பதாகைகளை ஏந்தியவாறு தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, "கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட உள்ளாட்சித் துறை பணியாளர்களுக்கு முழு மருத்துவ பரிசோதனை செய்வதோடு, அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்" என வலியுறுத்தினர்.
இதையும் பார்க்க: முதலமைச்சர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!