திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்றுவருகின்றனர். இந்தப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே பள்ளியில் யாரு கெத்து என்ற தகராறு இருந்துவந்துள்ளது.
இந்நிலையில், இன்று பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பெரும்பாலான ஆசிரியர்கள் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டனர். இதனால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறைந்த அளவிலேயே ஆசிரியர்கள் இருந்தனர்.
இதனிடையே பதினொன்றாம் வகுப்பு பி பிரிவில் பயிலும் சாமி சர்மா என்ற மாணவன் பள்ளி வளாகத்தில் நடந்து சென்றபோது பதினொன்றாம் வகுப்பு சி பிரிவில் பயிலும் விக்ரம் என்ற மாணவன் தனது நண்பர்களுடன் சாமி சர்மாவை அழைத்து, 'இனிமேல் இந்த பள்ளியில் நாங்கள்தான் கெத்து! நீங்கள் அனைவரும் எங்களை அண்ணா என்றுதான் அழைக்க வேண்டும்; இல்லையென்றால் அழித்து விடுவோம்' என்று மிரட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் கைகலப்பாகி உள்ளது. இதில் ஆத்திரமடைந்த விக்ரம், அவரது நண்பர்கள் சாமி சர்மாவை கீழே தள்ளி பலமாகத் தாக்கி உள்ளனர். இதனால் சாமி சர்மாவின் மண்டை உடைந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறியுள்ளது. இதையடுத்து, அங்கு வந்த சக மாணவர்கள் சாமி சர்மாவை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது தொடர்பாக பல்லடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். பள்ளியில் யார் கெத்து என்று காட்டுவதற்காக இந்தப் பள்ளியில் மாணவர்கள் அடிக்கடி தங்களுக்குள் மோதிக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது. இதனை ஆசிரியர்கள் கண்டும் காணாமல் விட்டதன் காரணமாகவே இன்று ஒரு மாணவனை கொலை செய்யும் அளவிற்கு மாணவர்களுக்குள்ளே தாக்குதல் நடந்துள்ளது என பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புவதே அங்கு ஒழுக்கம், நன்னெறி ஆகியவற்றை கற்பதற்காகத்தான்; ஆனால், இதுபோன்ற கீழ்த்தரமான கலாசாரங்களால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவுள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.