திருப்பூரை அடுத்த வாவிபாளையம் படையப்பா நகரை சேர்ந்தவர் நடேசன். இவரது 4 வயது குழந்தை லோகேஷ், கடந்த 14ஆம் தேதி டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால், காய்ச்சல் சரியாகாததால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி லோகேஷ் உயிரிழந்தார்.
இதனிடையே படையப்பா நகர் பகுதியில் குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் நோய் தொற்று ஏற்படுகிறது என்றும், இது குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் ஆவேசமடைந்த பொதுமக்கள், சிறுவனின் உயிரிழப்புக்கு நியாயம் வேண்டியும், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், உளத்துக்குளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீசார், அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதி அளித்தபின் சாலை மறியலை கைவிட்டனர்.