ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் ஆய்வு செய்தார். அப்போது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மருத்துவமனைக்கு தேவையான கட்டுமானங்கள், படுக்கை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுப்பராயன், “ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் ரேசன் பொருட்கள் அனைத்தும் வீட்டிற்கே சென்று வழங்கிட வேண்டும். விவசாயிகள் விளை பொருட்கள் தடை இல்லாமல் மக்களைச் சென்றடைய, போக்குவரத்து வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும்.
வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பினால் போக்குவரத்து வசதியும், போக விரும்பாத தொழிலாளர்களுக்கு மூன்று வேளை உணவு உள்ளிட்டவற்றையும் வழங்க வேண்டும்.
அதே நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். எம்.பி.களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து என்பது ஏதோ சதிகார முடிவு. மத்திய, மாநில அரசுகளால் கைவிடப்பட்ட திட்டங்களுக்கு எம்.பி. நிதி பயன்பட்டு வந்தது. நிதியை அதிகரிக்க வேண்டிய நேரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்தது ஏற்றுக்கொள்ள முடியாதது.
உடனடியாக இதனைத் திரும்பப் பெறவில்லையெனில் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இது பெரும் பிரச்னையாக வெடிக்கும். அதே நேரத்தில் எம்.பி.கள் சம்பளத்தை குறைத்ததில் வருத்தம் இல்லை” என்று கூறினார்.