திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கறிக்கோழி உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழிகள் மாநிலத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் கறிக்கோழிகளின் கொள்முதல் விலையை பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர், விலை நிர்ணயம் செய்துவருகின்றனர்.
பல்லடம் பகுதிகளிலிருந்து நாள்தோறும் 10 டன் கறிக்கோழிகள் அண்டை மாநிலங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுவருகிறது. கடந்த சில நாட்களாக கேரளாவில் பரவிவரும் பறவை காய்ச்சல் காரணமாக கேரளாவிற்கு கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே தற்போது, உற்பத்தி அதிகரிப்பு மற்றும் விற்பனை மந்தம் காரணமாக ஏராளமான கறிக்கோழி தேக்கம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கறிக்கோழியின் விலை சரிந்துள்ளது. இந்நிலையில், பல்லடம் பண்ணை கறிக்கோழியில் கொள்முதல் விலையில் மாற்றம் ஏதுமின்றி இன்று(ஜன.20) 74 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.