பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக திமுக, மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. கஜா புயலுக்கு ஆறுதல் கூறாதது, தமிழக அரசு கேட்ட நிதியை முழுமையாக தராதது, நீட் விவகார மவுனம், ஸ்டெர்லைட் மவுனம், மீத்தேன் மவுனம் என பல்வேறு விஷயங்களில் மோடியின் செயல்பாடுகள் அவர் தமிழகத்தை புறக்கணிப்பது போல்தான் இருக்கிறது என எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலர் கருத்து கூறி வருகின்றனர்.
இதனால் தமிழகத்தில் மோடிக்கு எதிரான மனப்பான்மை மேலும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம் வரும் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கறுப்பு கொடி காட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். நெட்டிசன்களும் தங்கள் பங்குக்கு #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நாளை திருப்பூர் வர இருக்கும் மோடிக்கு எதிராக திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கறுப்பு கொடி காட்டப்படும் என அக்கட்சியின் அவைத்தலைவர் துரைசாமி கூறியிருக்கிறார். சமீபத்தில் மதுரைக்கு வந்த மோடிக்கு எதிராக வைகோ கறுப்பு கொடி காண்பித்தார் என்பதும், நேற்று அஸ்ஸாமில் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி காண்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.